திங்கள், 15 ஆகஸ்ட், 2011

காதல்.. காதல்.. காதல்...

கண்களால் பேசிய காதல்
கடிதத்தில் உரசிய காதல்
கைபேசியில் முகிழ்த்த காதல்
தொலைபேசியால் தோன்றிய காதல்
குறுந்ததகவலில் குலவிய காதல்
இணையத்தால் இணைந்த காதல்
மின்னஞ்சலில் மின்னிய காதல்
குழந்தைக் காதல்
பள்ளிக் காதல்
கல்லூரிக் காதல்
பல்கலைக் காதல்
தனியார் கல்விக்கூடக் காதல்
அலுவலகக் காதல்..
ஆற்றங்கரைக் காதல்
இலக்கியக் காதல்
வீதியில் வந்த காதல்
இரயில் பயணக் காதல்
பேரூந்து நிறுத்தத்தில் உலவிய காதல்
பார்த்துப் பழகிய காதல்
பார்க்காமலே பழகிய காதல்
சொந்தம் தந்த காதல்
பந்தம் தந்த காதல்
நட்பில் பூத்த காதல்
சண்டையில் அரும்பிய காதல்
ஒருதலைககாதல்
இருதலைக்காதல்
திருவிழாவில் திருடிய காதல்
திருமண வீட்டில் வருடிய காதல்
பக்கத்து வீட்டில் பரிதவித்த காதல்
எதிர்வீட்டில் எட்டிப் பார்த்த காதல்
இடப்பெயர்வுகளில் இழைந்த காதல்
அகதிமுகாமில் அவதரித்த காதல்
திரைஅரங்கத்தில் தோன்றிய காதல்
ஒரு மணிக்காதல்
ஒரு வருடக் காதல்
ஒன்பது வருடக் காதல்
இப்போது புதிதாய்
முகப்புத்தகக் காதல்
அப்பாடி...
எல்லாக் காதலையும் பார்த்தாகிவிட்டது.
இனி....

தொட்டாச்சிணுங்கி மனம்..


என்னை
மென்று உமிழ்ந்திருக்கிறது
காலம் சக்கையாய்....
இன்னோர் உலகமாக்க
உந்திய மனமா இது..
தொட்டாச்சிணுங்கியாய்
சுருங்கிக்கொள்கிறது மழைத்துளிக்கும் கூட...
புத்தியும் கைகளும்
சேர்த்துவைத்த நம்பிக்கையும்
கவிதை மட்டுமே எழுதுகிறது..
அதுவும் வெற்றுக்கவிதைகள்...
ஆட்காட்டிக்குருவிகளின் கீச்சிடல்களில்
சினந்து சீறிய மனது
சிற்றெரும்புகளின் அரவங்கள் கேட்டுவிடுமோவென
அஞ்சி அதிர்கிறது....
மனம் முட்டும் சந்தோசக்காற்று
கண் முட்டும் சந்தோசக்கண்ணீரென்
வாய்விட்டு சிரித்ததெல்லாம்
மறந்து மறைந்தேவிட
ஒரு புன்னகைதான்
பொதுவானதாய் அனைத்திற்கும்...
சிரிக்கவும் பயமாயிருக்கிறது.....
என்னை மென்று உமிழ்ந்திருக்கிறது
காலம் சக்கையாய்..

குளிருலவும் இப்பெருநகரங்களும் நாங்களும்..



தேவைகளற்றும்
நிரம்பல்களற்றுக் கிடக்கின்றது மனது
நொந்து பயனில்லை
நோகாதிருப்பதும் இயலவில்லை...
அண்ணா கனடாவில்
தம்பி அவுஸ்திரேலியாவில்
நாங்கள் சுவிசில்
வாய்க்கொழுப்புடன்
சொல்லிக் கொள்வதற்குப் பின்
சேர்ந்திருத்தலையும்
நிலவிரவுச் சோற்றுக்கவளத்தின்
ருசியையும் வலிந்து மறைத்துவிடுகிறோம்..
அவுடியிலும் பென்ஸிலும்
அலைந்துதிரியும் ஆடம்பரத்திலும்
அப்பாவின் சைக்கிளின்
பின்னால் புத்தகப்பையும்
முன்னால் நாமுமாய்
பள்ளி சென்றது
நினைவுப் படுக்கையில் சுகமாய்...
இந்தப் பீட்ஷாக்களும் பேகர்களும்
அம்மம்மா சுட்டுத்தரும்
அப்பத்திற்கு ஈடாகுமா தெரியவில்லை..
சுத்துமாத்துக்களுக்கும்
பம்மாத்துக் கதைகளுக்கும் பின்னால்தான்
பதுங்கியிருக்கிறோம்
குளிருலவும் இப்பெருநகரங்களில்...
நிறப்பிரிவுகள்,
இனப்பிரிகைகளுக்கிடையில்
ஒரு நூறு அவமானங்களைச் சுமந்தபடியும்
பெருமிதத்தோடுதான் சொல்கிறோம்
அண்ணா கனடாவில்
தம்பி அவுஸ்திரேலியாவில்
நாங்கள் சுவிசில்.....

எல்லோரும் ஆயத்தமாகின்றனர் தத்தம் தெருக்களில்....

ஒரு பெருத்த மழைக்கான
கனத்த எதிர்பார்ப்புடன் எல்லோரும்
ஆயத்தமாகின்றனர்
தத்தம் தெருக்களில்
அழகிய சொற்கள் பின்னிய கவிதையாய்
புதிய தென்னங்கிடுகுகள்
அலங்கரித்தன வீட்டுக்கூரை விரிசல்களை..
அரிசி கோதுமை தானியங்கள்
தேவைக்கும் வளமைக்கும்
ஏற்றதாய் நிறைக்கப்ப்பட்டன
பக்கத்து வீட்டிலும் அதிகமாயும்..
வத்தல்கள் புழுங்கல்கள் தயாராயின
கடல் மீன்களும் கருவாடாக
பதப்படுத்தி பத்திரப்படுத்தப்பட்டது..
மரங்கள் நறுக்கப்பட்டு
மழைக்குத் துளிர் விடத் தயாராய் நின்றன
பூக்கவிருக்கும் மங்கையரென..
போரீந்த பரிசாய்
வாழ்க்கை நிர்வாணமாக்கப்பட்டு
மரநிழலில் வாழ்ந்த
மாம்பிஞ்சுகளிணை மழலைகளை
கவனிக்கவில்லை
அவர்களும்..
இவர்களும் தான்..

மாண்புமிகு பத்தினியாய்....

அற்றிருத்தல் நலம்
பற்றறுத்தலை விடவும்
மோப்பக் குழையும் அனிச்சமென
மௌனித்திருக்கையில்
பிய்த்தெறிந்துவிடுகிறாய்
அறிந்தோ அறியாமலோ
மாதவிடாய்க் கதைகள் பேசி
மகிழ்ந்திருக்க முடிவதில்லை பெண்ணாக...
பாண்டி வட்டத்திற்குள் சுருங்கிக்கொண்டு
புளியங்கொட்டைகளுடன்
புன்னகைக்கச் சொல்கிறாய்
முகப்புத்தகத்தில் உலகிருக்கும் யுகத்தில்...
அரசியல் கல் களைய
ஆர்வமிருக்கையில்
அரிசியில் கல் களைக்கிறேன்
மீண்டும் மீண்டும்
புணர்தலில் கூட
புரிந்துகொள்கிறேன் உன்னை
உணர்தலில் கூட
தொடர்வதேயில்லை என் நெஞ்சிருப்புக்களை
நீ
முரண்பாட்டு மேசைகளில்
உணவருந்திக்கொண்டிருக்கிறோம்
எண்ணக் கிளிஞ்ச்சல்கள்
தேங்கிக் கிடக்கின்றன தட்டுக்களில்
அற்றிருத்தல் நலம்தான் போலும்
பற்றறுத்தலை   விடவும்

மனக்கழுதை

மனக்கழுதை
மேயத் தொடங்கிற்று
காகிதத்திற்காய்...
அகண்ட அண்ட சராசரங்களில்
ஆதி வீரியமுடைத்து
அதில் கனியெனத் தொங்கும் விண்மீன் துவாரங்களில்
சூரியப் பிரகாசம் மிஞ்சி
ஆழ்கடல் இடைவெளிகளில் நன்முத்தென
ஆணி வேரில் வசிக்கும் நாவல் மரப் பொந்துகளில்
பழம் பெருமைகள் ஊறி ஊறி உரம் பெற்று
போர் அறைந்த பூமியின் சொல்லொணாத் துயரங்களில்
வலிகளால் வலிமையுற்று
நேர் வகிடெடுத்த முதிர்வறியோரின்
கக்கத்து முடிச்சுகளில்
அனுபவ வளைவுடன்
எந்த தீக்கும் கசங்காததாய்
இரண்டாம் வராகமாய் பூமி தோண்டிக்
கொதி நெருப்புக் குழம்பிலும்
தின்பதற்காயன்று
சொற்கலாளான எழுத்துக்களில்
இந்த வரலாற்றைத் தொடர்ந்தெழுதுவதற்கான
காகிதத்திற்காய்
மனக்கழுதை
மேயத் தொடங்கிற்று
மறுபடியும்...

ஒரு போத்தல் பியர்

கலாச்சாரங்களுக்கான
காவலரண்கள் உடைந்துவிட்டன.....
ஒரு போத்தல் பியருக்குள்
தள்ளாடுகிறது
தமிழனின் மானம்

பஸ் பிடிச்சு
படாதபாடுபட்டு
பிளேன் பிடிச்சு
பிரான்ஸ் வந்து
தாயின் தாலி வித்த காசில்
தண்ணியடிக்கும்
சில கழுதைகள்....

ஊரையும் மறந்து
உறவையும் மறந்து
குடும்ப பேரையும் மறந்து
குடித்துக் கூத்தடித்து
நாட்டுக்கு நீதி சொல்ல
தெருவில் நடக்கிறார்கள்.....

எங்கிருந்தோம்
எப்படியிருந்தோம்
ஏன் வந்தோம்
எப்படி வாழ்கிறோம்
என்பதெல்லாம் மறந்து
அகதியாய் இருந்துகொண்டும்
அடிதடி மன்னனாகத் துடிக்கும்
அறிவில்லாதவர்கள்....

வயிற்றைக் காப்பானென்று தாயும்
மானம் காப்பானென்று
தந்தையும்
நினைத்திருக்க
மயிற்றை வளர்த்துக்கொண்டு
மன்மதன் வேஷம் போடும்

மண்ணாங்கட்டிகள்....

விஞ்ஞானம் வளர்ந்து
மெஞ்ஞானமும் வளர்ந்து
விரைந்தோடும் உலகில்
ஒரு போத்தல் பியருக்குள்
தள்ளாடுகிறது.......
தமிழனின் மானம்....