சனி, 20 நவம்பர், 2010

நீயும் நானும் நம் காதலும்..

           மழைகழுவிய
          பெருந்தெருக்களில்
          பூத்தூவி வரும்
          குளிர்ந்த கார்காலமாய்
          நீ

         என்
         தலையணைக்குப்  பதிலாக
        உன் நினைவுகள்                                                                                                                                                                                                                               
                                       

  •                                                                                                                                                                                                                                                                     
           முகிலுடைத்து
           முகம் துடைப்பவனே
            என் விழிகளையும்
            கொஞ்சம் துடைத்துவிடேன்.
         வரம்புகளற்ற
         புரிந்துகொள்ள முடியாத
         புதுக்கவிதை மாதிரி
         நீயும்..
              என்னூரின் புத்தகசாலையின்
              புத்தக அடுக்குகள்போல்   
              பழக்கமாகிவிட்டது
              உன் கோபங்களும்..

             மூன்றாம் உலகயுத்தம்       
             உனக்கும் எனக்கும்தான்
             மூளும் போலிருக்கிறது.
             வேறொன்றும் வேண்டாம்
             கொலுப்பொம்மை  போல
             என் பக்கதில் இரு
             அது போதும்
            ஒரு நல்ல கவிதை
            வாசிப்பில் உருவாகும்
            இன்னொரு நல்ல கவிதை போல  
            நீயும்.. 
           பிரயாணச் சோர்வு போல்
           தீர்த்துவிடக் கூடியதாயில்லை
           நீ தந்த
           காதல் சோர்வு.
           பனையோலைத் தமிழ் போல்
           புரிந்துகொள்ளக் கஷ்டமாய்
           நீ..

            எனக்கு மட்டும் அதிகாரமிருந்தால்
            என் தேசத்துத்
            தேசியச் சின்னமாகுவேன்
            உன் புன்னகையை.
           நீ
           திருடுவதற்காகத்தான்
          கண்டபடி போட்டுவைத்திருகிறேன்
          என் இதயத்தை..

  •                                                                                                                                                                           
                 அடே ஓவியனே!
                 என்னை வரை.

            குருட்டுச் சிந்தனையினூடே     
            சிக்கும் கவிதை போலவாவது
            என் மேல் தோன்றக்கூடாதா
            உன் காதல்..

           உன்
           சிம்மாசனத்தின் கைப்பிடியிலாவது
           சிறு இடம் கொடேன்
  •     
            எதேச்சையாய்
            நோக்கிச் சென்றாய் நீ
            காதலோடு நோக்கியதாய்
            கர்வப்பட்டது என் காதல்.

         நீ
        காத்திருக்கும் கணங்களில்தான்
        கெட்டிப்படுகிறது
        நம் காதல்
         எத்தனை பொய்யாவது சொல்
         எத்தனை தப்பாவது செய்
         எப்படித் தவிர்கலாமெனினும் தவிர்
         நான்
         உன்னைத்தான் காதலிப்பேன்

         நீ வரும்போது
         மலர்களும்
        நீ வராதபோது
        கவிதைகளும்
        மலர்கின்றன மனசுக்குள்..
  •          

            கோபத்தை தணிக்கும்
            சூட்சுமம் ஏதாவது
            உள்ளதா
            உன் குரலில்..





           கடலே
         சந்தேகப்படாதே
         எத்தனை திசை திரும்பினும்
         உன்னோடுதான் கலப்பேன்.

         உன்னைப் பற்றிய
         என் கவிதைகளுக்கு
         அர்த்தம் புரியவில்லை
         உன்
         பார்வைகளைப் போலவே........

          என்
          தொலைக்காட்சிப் பெட்டியின்
          எல்லா அலைவரிசைகளும்
          உன்னைப் பற்றியதுதான்...

  •  
           உன்னைத்தான்
           எனக்குப் பிடிக்கும்
           உன்
           புறக்கணிப்புக்களை அல்ல..
           உனக்குச்
           சிரிக்கத் தெரிந்திருந்ததால்தான்
           அறிமுகமானது என்னில்
           அழுகை..
           நீ சூரியன்
           நான் பூமி
           உன்னை வலம்வருவோரிடை
           நான் மட்டும்
           உயிர்ப்புள்ளவள்.
           காதலுக் கண் இல்லை.
           நீ சென்றுவிட்டது அறியாது
          என் காதல்
          உன்னையே தேடுகின்றதே..
         ஒரு நிமிடச் சந்திபிற்க்காய்
         ஒருநாள் முழுவதும்
         தயாராகிறேன்...
           உன்
          இதயத்தில் இருந்தால்தான்
          உயிர் பிழைப்பேன் என்றது
         என் காதல் பார்த்த
         வாஸ்து.
         கொஞ்சம் இடம் கொடேன்
         என் காதல்
         என்மேல்
         உயிரையே வைத்திருகிறது .
         என் இதயத்தை
         உடைப்பதாய் நினைத்து
         ஏன் நீயே
         உன் இதயத்தை
         உடைத்துக் கொள்கிறாய்.

          நீ பேசாதிருந்தபோதுதான்
          அதிகம் பேசியது
          என் காதல்.
          !ஏய்!!
          மழைமுகிலே
          என் தேசம் வறண்டிருக்கிறது 
          எப்போது மழை தருவாய்          
  •  
          நான்
          உன்னை நோக்கிய பின்புதான்
          காதல்
          என்னை நோக்கியது.
  •  
          எம்
          காவிய நாடகத்தின்
          இரு வேடத்திலும்
          நான் மட்டும் எப்படி?
          நீயும் வா...
          உனக்குள்
          நான் வரும் நேரம்
          எனக்குள்
          உயிர் வரும் நேரம்.
  •      
          தீக்குள் விரல் வைத்தேன்
          சுட்டுவிட்டது
          உன்னைப் போலவே..
  •  
          பட்டாம்பூச்சியாய் தான்
          சுற்றித் திரிந்தேன்
          உன் கண்மலர்களை
          காணும்வரை....
  •   
            உன்
            இடதுகை ரேகையில்
            எழுதிய விதி
            என்னுடையதா?..
  •  
           ஒவ்வொரு நாளும்
           தபால்காரன் வருகிறான்  
           உன் பதிலில்லாமல்
           என் தூக்கம்
           என் விழிப்பு
           இரண்டுக்குமிடையில்
           எல்லாமே நீதான்
  •            
           நீ காதல்
           நான் தேடல்
           எப்போதாவது சந்திப்போம்
          பைத்தியக்காரி என்கிறார்கள்
          உன்னைப் பார்த்திராத
          என் தோழிகள்
  •  
             நீ வராதே
            நான் காணாமல்போய்விடுவேன்

           கனவுகளில் வருவாயென
           இரவில் மட்டுமல்ல
           பகலிலும் உறங்குகிறேன்
            உனக்கென்ன
            உலா வருகின்றாய்
            உடைபடுவது
            என் மனமல்லவா..
           கடல் மீன்களுக்கு
           ஏன் வலை வீசுகிறாய்?
           இதோ
           என் விழிமீன்கள்
           உனக்காக...
            உன்
            புகைப்படம்
            என்
            வசிப்பிடம்.
             நான் வரும் கனவுகளைத்
             துரத்தாதே
             அவை
             இரட்டிப்பாகின்றது என்னுள்
             நீ அழகியமலை
             நான் மலையருவி
            எப்போதும் உன் வழியில்தான்
            ஓடிக்கொண்டிருப்பேன்.
            எது பூசியும் சிவக்காத
            என் கன்னங்கள்
            உன் பேரைக் கேட்டதும்
            சிவப்பது ஏனோ?
  •  
            என்னைத்
            தொடும் சாரலும்
            சுடுகிறது
            உன்னைப்   பிரிந்த
            பொழுதுகளில்
     
  •           
           நீ
           நடந்தாய் மேகமாய்   
           எனக்குள்
           அடித்தது சாரல் 

  •             
             நீ
            என் பெருமை.
  •            
            இரு நிகழ்வுகள் பற்றி
            எனக்குத் தெரியாது..
            ஒன்று
            என் பிறப்பு   
            இன்னொன்று
            உன் மேலான காதல்.

          எப்போதாவதுதான்  
          நேரில் வருகிறாய்
          எப்போதும்
          நினைவில் நிற்கிறாய்

.
            சுகமாய் என்னைத்
            தீண்டாதேஎன
            தென்றலுக்கு கட்டளையிட்டாயா
            சுட்டுவிட்டுப் போகிறதே
              வார இதழாய்
              வந்து போகாதே
              நாளிதழாய்
              வந்து கொண்டிரு..
              உன்
              மவுனத்தைவிட   
              கொடிய விஷமும் இல்லை.
              உன்
              சிரிப்பைவிட
              சிறந்த மருந்தும் இல்லை.


  •   
            நீ வல்லினம் 
            என்னைக் கொஞ்சம்
            உன்னுள் சேர்
            இடையினமாகவேனும்
            இனிமை தருவாய்.



           நீயும் நானும்
           காதலின் இரு கைகள்
           சேர்ந்தால்தானே ஒலி.
           எனக்குத் தெரியும்
           உன் விழிகள்
           என்னைச்
           சுட்டெரிக்கும் சமயங்களில்
           உன் இதயம்
           உன்னைச் சுட்டெரிப்பது.

             என் பூமியை
             அமேசனாக்குவதும்
             சஹாராவாக்குவதும்
             உன் பொறுப்பில்தான்.
            இதயச் சுவர்களில்
            உன் உருவப்படத்தை
            வரைந்திருக்கிறேன்
            பார்க்கவேனும் வாயேன்..
            நீ கஜல்
           நான் உருது
           நீ கவிபாடவே
           வார்க்கப்பட்டிருக்கிறேன்.
            தென்றல்             
            எல்லோருக்கும் சுகம் தருகிறது
            என்னை மட்டும் சுடுகிறது.
            பழக்கூடையைப் பார்த்து
            படபடக்கும்
            குழந்தைகளின் நிலைதான்
            உன்னைக் காணும்பொழுதில் எனக்கும்.
            தனிமை,
            எல்லோரதும் வெறுப்புக்குரியது
            எனது விருப்புக்குரியது.
             என் இனிய இசையே  
             கவி வரியாய் இருக்கிறேன்
             என்னைப் பாடலாக்கு
             உன்னைக் காதலிப்பதாய்
             கேள்விப்பட்டதும்
             சூரியன் என்னைச்
             சுடுவதை நிறுத்திவிட்டது.
             கொடுத்து வைத்தது
             உன் வீட்டு
             முகம் பார்க்கும் கண்ணாடி
              என்னிலும் கூடுதலாய்..
             நான்
             வாசிக்க விரும்பும்
             அழகிய புத்தகம்
             நீ.....
             நீ மறுக்க மறுக்கத்தான்
             கொழுந்துவிடுகிறது
             நெஞ்சுக்குள் நெருப்பு.
            முழங்கால்களைக் கட்டிக்கொண்டு
            முகம் புதைக்கும் போதெல்லாம்
             என்னோடு நீயும் சேர்ந்துவிடுகிறாய்.
            நான்
            இறைவனால்
            உனக்காக அளிக்கப்பட்ட பரிசு
            பிரித்துப் பார்க்க மறுத்தால்
            எப்படி?
              சரிதான் போடா
              காதலிக்கப்படுவதைவிட
              காதலிப்பதில்தான்
              சுகம் அதிகம்..
             நீயும் தீயும்
             ஒன்றுதான்
             இருவருமே சுடுகிறீர்கள்.
              நேசிக்கத் தகுந்தபடி
              நீ கிடைத்தாயே
              உன் நேசம்தான்
              கிடைக்கவில்லை.
              இலைகளுக்குள்ளே
              கிளையாய் மறைந்திருந்தாலும்
              கொடியாகி உன்னைக்
              கண்டுபிடிப்பேன்.
               நீ அலைகடல்
               நான்
               மூழ்கி முத்தெடுப்பேன்.
  •  
             ஒருவரிக் கவிதை
             நான்
             பொருள் பிரித்தெடுக்க
             வா நீ.
          பசுபிக் கடலாய்   
          பரந்திருக்கும் உன் கண்களில்    
          தூசாகி விழுந்தேனும்
          கலந்துவிடுவேன் ஓர் நாள்.

           சுற்றிக் கொண்டேயிரு
           சூறாவளியாக
           காத்திருக்கிறேன் உன்னைச்
           சுவாசமாக்க..
            காதலில் மட்டும்தான்        
            திருடியவனைத் தெரிந்தபின்னும்
           திருட்டுக் கொடுத்ததை
           கேட்காமல் இருப்பது..
  •  
           கன்னத்தில் முத்தமிட மட்டுமல்ல
           உன்
           கன்னக்குளிக்குள் தேங்கும்
           கண்ணீரையும் துடைத்துவிடும்
           என் காதல்..

           தொடமுடியாத வானையும்
           என்
           மனக்கண்ணால் தொடுகிறேன்
           உன்
           கடைக்கண் என்மேல்
           விழுந்த பொழுதுகளில் ..
           `ஆம்` என்று மட்டும்
           சொல்
           ஆகாயம் பறித்துத்
           தருகிறேன்.
          உன் இதயத்தில்
          ஈரமில்லை என்கிறார்கள்
          எனக்கல்லவா தெரியும்
          உனக்கு
          இதயமே இல்லையென்பது
         சூரியன்
         எனக்கு மின்னஞ்சல் செய்திருந்தான்
         உன் அழகின் இரகசியத்தை
         கேட்டுச் சொல்லும்படி
         சொல்லேன்..
           உன் கண்களில்
           மின்னல்
           என் நெஞ்சில்
           தூறல்
          உனக்காக
          காத்திருந்து காத்திருந்து
          களைத்து எழுதிய
          கவிதைகளைப் படித்துவிட்டு
          இதோ இவர்களெல்லாம்
          என் கையெழுத்துக்காக
          காத்திருக்கிறார்கள்.
            உங்கள் இருவருக்கும்
            அப்படி என்ன உறவு
            நெஞ்சுக்குள் நீ வந்தால்
            கண்ணுக்குள் நீர் வருகின்றது.
           உன் கண்கள்
           உனக்கு உறுப்பு
           எனக்கு நெருப்பு
          விரிவுரைகளின் போது
          மெதுவாக ஓடும் கடிகாரம்
          உன்னைச் சந்திக்கும்போது மட்டும்
          விரைவாக ஓடுகிறது
          வெட்கப்படும்போது நானும்
          கோபப்படும்போது நீயும்
          காதலிக்கும்போது நாமும்
          அழகாக இருக்கிறோம்.
          கண்கள்
          நாம் பார்த்துக்கொள்ள மட்டுமல்ல
          பேசிக்கொள்ளவும்தான்.
          உன்னை மட்டுமல்ல
          உன்னைச் சார்ந்தோரையும்
          நேசிக்கிறேன்
          எனக்குத் தெரியாமலே..
          என் கண்கள்
          உன்னைப் பார்க்க மட்டுமே
          சொல்?
          உன் கண்கள்
          என்னைப் பார்க்கவா
  •  
           மௌனமாயிருந்தே
           பேசிக்கொள்பவர்கள்
           காதலர்கள் மட்டும்தான்
  •  
           காயப்படுத்துவது
           உனது உரிமை
           காயப்படுவது
           எனது கடமை
            நீயும்
            என் கவிதைகளைப் போலவே
            உனக்காக எழுதப்பட்ட கவிதைகள்
            என்னிடமே இருக்கின்றன
            எனக்காக படைக்கப்பட்ட நீயும்
            தள்ளியே இருக்கின்றாய்
            என்னிடம் வந்து சேராமலேயே..
  •  
           என்ன வசியம் வைத்திருக்கின்றாய்
           உனக்குள்
           வெறுக்கின்றாய் என்றறிந்தும்
           விரும்புகிறேன் உன்னை..
             நீ வரும்போது
             மலர்களும்
             நீ வராதபோது
            கவிதைகளும்
            மலர்கின்றன மனசுக்குள்..
  •  
           அடே..
           கொடுமைக்காரனே
           கொஞ்சாவிட்டாலும் பரவாயில்லை
           கோபங்களையாவது
           என்மேல் காட்டேன்.
          நீ என்னைப்          
          பார்க்கத் தயங்கிய கணங்களில்தான்
          நான் உன்னைக்
          காதலிக்கத் தொடங்கினேன்.
          உனக்காகவே
          செதுக்கிவிடப்பட்ட
          ஒற்றையடிப் பாதையாய்
          நான்
           ஏய்!
           என்னைக் காதலிக்காதே
           நான் சுதந்திரமாயிருக்க விரும்புகிறேன்.
          

           தொலைபேசிகள் எல்லாம்          
           பல்லாண்டு வாழட்டும்
           தூரமாகியிருந்த உன்னை
           என்
           தோள்களில் சாய்த்தவையல்லவா
           நான் உன்னைப்
           பார்க்காமலே இருந்திருக்கலாம்
           நீயும் என்னைக்
           காதலிக்காமலே இருந்திருக்கலாம்..
          ஏதோ ஒன்றைச் சுட்டி
          அழும் குழந்தை போல
          நானும் அடம்பிடிக்கப் போகிறேன்
          நீதான் வேண்டும் எனக்கு..
          மழைத்துளி
          சூரியனைப் பார்த்தபோது
          வானவில் தோன்றியது
          நான்
          உன்னைப் பார்த்தபோது
          காதல் தோன்றியது..
          உன்னைக் காதலித்த பின்புதான்
          கிணற்றுத் தவளைக்கு
          அர்த்தம் புரிந்தது

            நீ பிறந்த நாளின் போதுதான்
            எழுதப்பட்டதாயிருக்கும்
            எனது விதி.
           உன் கண்ணுக்குள்
           எத்தனை காந்தங்களை  
           ஒளித்திருக்கிறாய்.
  •  
              தானும் உறங்குவதில்லை
              என்னையும் உறங்கவிடுவதில்லை
              காதல்.

             என் விழிகளுக்குள்
             துயில்
             இமைகளால் விசிறிவிடுகிறேன்.
           உறங்கும் நேரத்தில்
           தூரத்தில் கேட்கும் பாடலாய்
           நீயும்
           எப்போதும் சுகமாகவே
           எனக்குள்..
            இரவுக்கும் இருளுக்குமான
             உறவே தேவை
             நீ
             பகலாய் பிரியாதே என்னை..
             நீ
             கொடுத்து வைத்தவன்
             என் காதல்
             உனக்கு கிடைத்திருக்கிறதே..
             நீ
             என்னைக் காதலிப்பதாய் நினைத்து
             உன் கண்களிலிருந்து
             கவிதை எழுதவும்
             உன் பார்வைகளில்
             வெட்கப்படவும் கற்றுக்கொண்டேன். 
             என்
             இதயத்தோடு சேர்த்து
             என் குறும்புத்தனங்களையும்
             திருடிச் சென்றுவிட்டாய்
             நீ..
            மழைக்காலத்தில்            
            அதிகமாகும் கிணற்றுநீர் போல்  
            மாலைக்காலத்தில்
            நீ அதிகமாகிறாய்.
            தும்மலின் போதும்
            நீ கஷ்டப்பட வேண்டாமென்று
            உன்னை நினைப்பதையே
            நிறுத்திவிட்டேன்.

            சுற்றுலா செல்லக் கேட்கிறார்கள்
            தோழிகள்
            உன்னைவிடவா சுற்றுலாத் தலத்தில்
            சிறப்புக்கள் இருக்கப் போகிறது.

  •  
          முக்காடு போட்டு   
          முட்டும் தென்றலைப் போல
          கண்ணுக்குத் தெரியாமலே வந்து
          கலங்க வைக்கிறது  
          காதல்..

            வசந்தமே!
            நீ வந்து சென்றுவிட்டாய்
            அன்று பூத்த பூக்கள்
            இன்னமும் எனக்குள்
            ஈரம் காயாமல்..
             காதல் காட்டில்
             மான்
             புலியைத் துரத்தலாம்.
             மேகமே,
             நீ சிந்திச் சென்ற தூறல்கள்
             வெள்ளமாய் வந்து
             அடித்துச் சென்றுவிட்டது
              என்னை..
           கவிதை எழுதுவதற்கு               
           காதலிப்பதற்கு
           பொழுதுபோக்குவதற்கு
           உயிர் வாழ்வதற்கும்
           எல்லாவற்றிற்கும் உதவுகிறது
           உனது நினைவுகள்.
            உனக்குத் தெரியுமா
            காதலுக்கு இனிமை
            தனிமைதான்
          எங்கே
          உன்னைப் பற்றிய நினைவுகள்
          தீர்ந்துவிடுமோ என்று
          உன்னை நினைப்பதையும்
          தள்ளிப் போடுகிறேன்.
           மின்சாரம் இல்லாத  
           இரவு நேரமாய்
           நிம்மதி தருகின்றாய்
           நீயும்..
           என்
           சிரிப்பிற்கும்
           சிலிர்பிற்கும்
           சொந்தக்காரன் நீ
           சிறையிருக்கிறேன் சுகமாய்
           உன்
           நினைவுக் கம்பிகளுக்குள்ளே
           உன் அருகாமையை
           எனக்கு
           வாடகைக்கு விடுவாயா
            ஆகாயம், கடல் போல்
            உனக்குள்ளும்
            கண்டுபிடிக்கப்பட வேண்டியவை
            ஏராளம்..
           காதலைச்
           சொல்ல நினைக்கையிலே
           அங்கிங்கு தேடாதே
           உன் சுவாசம் சுற்றுமிடத்தில்தான்
           வாழ்ந்துகொண்டிருப்பேன்
            வீடுகட்ட மண் சுமப்பவர்களை           
            என்னூர் பாஷையில்
            `முட்டாள்` என்பார்கள்
            காதலுக்காக
            உன்னைச் சுமக்கும் என்னையும்
            எல்லோரும்
            `முட்டாள்` என்கிறார்கள்.
             ராஜவீதி  வழியாய்
             ராஜராஜன் வருகிறான்
             மொய்க்கிறது என் பார்வை
             சாரதியாய் வரும் உன்னை நோக்கி
           இந்தக் குளிர்காற்றைக்           
           கண்டித்து வை
           நீ அருகில்லாததறிந்து
           என்னை மீண்டும் மீண்டும்
           முட்டிச் செல்கின்றது
           
            என் ஊரில்
            தனித்துக் கிடக்கும் செம்மண்பாதையாய்
            நான்,
            தடைகள் உடைத்து வந்து
            சந்தித்துச் செல்லேன்
            ஒரு முறை     
            நிலவின்
            கலங்கமற்ற ஒளியில்
            தூய்மையாகும்
            இரவுகளைப் போல்
            உன் காதலாலும்
            தூய்மையாகிறோம்
            நானும் என் காதலும்..
  •  
           நீ           
          இன்னமும் என்னைக்
          காதலிப்பதாயில்லை
          நானும்
          வேறொருவரையும்
          காதலிப்பதாயில்லை

            படிதாண்டாத
            பத்தினியைப் போல்
            உன்னைத் தாண்டுவதில்லை
            என் காதல்..

            உன்
            தோட்டத்திற்குள் வந்த என்னை
            முட்களால் குத்தி வேருப்பூட்டுகிறாய்
            எனினும்
            உன் தோட்டத்தைவிட்டு
            வேறெங்கும் பூப்பறிக்க முடிவதில்லை
            என்னால்..  
  •  
           நிரம்பி வழிந்தோடும்
           ஆற்றைப்போல்
           என் காதலும்
           மேடு பள்ளங்கள்
           அற்றதாய்..
              என்
             கழுத்து வளைவுக்குள்
             சிறையிருக்கிறாயா?
             காதலா..
  •  
            உனக்குத் தெரியுமா
            உன் ஒரு காதல்பார்வை
            என்னை ஒரு வாரம்
            உற்சாகமாய் வைத்திருக்கும்.
           உன்னைத்
           தொடவும் முடிவதில்லை
           உன்னை
           விடவும் முடிவதில்லை
  •  
           ஒரு புகைவண்டிப் பயணத்தில்
           இடையில் வந்து இடையில் இறங்கும்
           பயணியைப் போல்  
           என் வாழ்விலும்
           நீ..
  •  
            ஒரே அழுத்துதலில்
            பிரகாசிக்கும்
            ஆயிரம் மின்விளக்குகள் போல
            நீ ஒருமுறை பார்த்தால்
            என்னுள்ளும்
            ஆயிரம் மின்விளக்குகள் பிரகாசிக்கின்றன.
  •  
             நீ
             ஒவ்வொரு நிமிடமும்
             வீணாக்குகிறாய்..
             என் காதலை..
  •  
             யன்னலோரத்து இருக்கையுடனான
             நீண்ட பயணங்கள்
             எனக்குப் பிடிக்கும்
             ஆனாலும்
             உன் மீதான பிடிப்பிலும் அதிகமில்லை. 

           என்னை
           உன்னை
           ஒற்றைச் சிறுபுல்லை
           சித்தெரும்புகளை
           உயிருள்ள உயிரற்ற எல்லாவற்றையும்
           நேசிக்கத் தொடக்கி வைத்தது
           என் காதல்.

  •  
              இரவுகளில்
              நட்சத்திரங்களை அழவைப்பதுபோல்
              என்னையும் அழவைக்கிறது
              காதல்..

             சில  கவலைகளின் போதும்
             கலகலக்க வைப்பது
             உன் மேலான
             என் காதல்தான்..
  •  
           உனக்கே தெரியும்
           உன்னை கற்கத்தான்
           உன்னிடம் வந்தேன்
           உன்னை மறப்பதை அல்ல..

            எந்தத் தாளத்திற்கு
            கட்டுப்பட்டிருக்கிறது
            உன் நடை
           இராமா!
           சீதையாக விருப்பமில்லை  
           எனக்கு, எப்போதும்
           உன் கூடவே இருக்கும்  
           அம்பாறாத் தூளியாகிறேன்.
            கண்ணை மூடும்போதெல்லாம்
            விரிகிறது
            உனக்கும் எனக்குமான உலகம்.
            என்னைத் தவிர்ப்பதாய் நடிக்காதே            
            உன்னைப் பற்றி
            உன்னைவிட
            எனக்கு அதிகம் தெரியும்..
           உன் இதயத்தை
           கொள்ளையடித்துவிட்டேனா
           கைகளால் சிறைபிடித்து
           இதழ்களால் தண்டித்துவிடு..
            என்ன இது
            ச்சீ.. என்பதை
            அடிக்கடி சொல்லவைக்கிறாய்
            நீ..
           நீ
           காத்திருக்கும் கணங்களில்தான்
           நம் காதல், இன்னமும்
           கெட்டிப்படுகிறது
            சூரியனுக்கும் வியர்க்குமா
            நான் பார்க்கிறேன்
            உனக்கு வியர்க்கிறதே....

            என்           
            குளியலறைக்கு நன்றிகள்
            உன்னை நினைத்தபடி குளிக்கவும்
            உன்னை நினைத்து அழவும்
            வசதியாயிருக்கிறது.
             உன் வருகைகளுக்காக
             வாசல்படியிலும்
             உன் தொடுகைகளுக்காக
             கனவுகளிலும்
             காத்திருக்கிறேன்.

             தடுக்க முடியாது உன்னால்
             நான் உன்னைக்
             காதலிப்பதை...
            தேவதாஸ் ஆகவேண்டிய              
            கட்டாயம்  உனக்கில்லை
            நான்
            மீரா ஆகாமல் பார்த்துக்கொள்
                   கைதியாகவும் தயார்
                   உன்
                  இதயச்சிறையில் வைப்பதானால்

  •               
                  என்னை வீழ்த்தியது  
                  புயலென்று நினைத்திருந்தேன்
                  விழித்ததும் தான் தெரிந்தது
                  உன் புன்னகை என்பது

          சுற்றம் சூழ
          நான் தனித்திருக்கிறேன்
          நீயில்லாமல்...

                                                               *நன்றி*              








1 கருத்து:

  1. காதல் கவிதையைப் போல அழகானது. கவிதையே காதலைப்பற்றியதாய் இருந்தால்...?

    இப்படிதான் இருக்கும்...

    உங்கள் காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
    :-)

    பதிலளிநீக்கு