வியாழன், 24 நவம்பர், 2011

பறவையிறகின் ஒற்றை இருக்கை....

 



காற்றில் அலைந்துலையும்
உதிர்ந்த பறவையிறகின்
ஒற்றை இருக்கையாய்
எதுவும் அமையலாம்..
அலைகடல் நுரை
சேற்றுநிலம்
இலைகளடர்ந்த மரநுனி
படுகிழவியின் பாக்குப்பெட்டி
வைத்தியனின் வீட்டுக்கூரை
கலைஞனின் சாகசக்கை
ஒரு மைதானத்தின் மூலை
என...
கிழவி காதுகுடையவோ
வைத்தியன் மருந்திடவோ
எதிர்காலத்தில் பயன்படலாம்
சேற்றின் நிறமாகி மறையவும் கூடும்
மைதானத்தில் கேட்பாரற்றுக்கிடப்பது
அதன் விதி
கலைஞன் கைசேரும் இறகு
அருங்காட்சியகத்தில் பொக்கிஷமாகும்...
வரம்பெற்றது
அதே பறவையின்
குஞ்சுகளுக்கு மெத்தையாகும்
இறகு.....

வாலறுந்த நெத்தலிகள்....

 
இந்துக் குடாக்கடலொன்றின்
இளம்பாறை இடுக்குகளில்
பிறந்தெழுந்து தேம்பியழும்
வாலறுந்த நெத்தலிகள் நாம்....
சுண்ணாம்புப்பாறையின் தகிக்கும் வெப்பத்தில்
சுற்றிச் சுழன்று பல்கிப் பெருகி
கூடிக்குலவி கும்மாளமிட்டிருந்தோம்
பாசி உண்டு
பவளப்பாறைகளில் படுத்தெழுந்து
பவித்திரம் பெற்றோம்...
மீனுண்ணிகளுடன் கைகோர்த்த
ஊனுண்ணிகளின்
பிரமாண்டமான வாய்களுக்குள்
போனது போக
வாலடித்தல்களில்
மாண்டது மாள
ஏழுகடல் ஏழுமலை தாண்டிவந்தும்
ஏதிலிகளாய் குளிர்கடலில்....
எதுவுமே இல்லை
சந்தோசங்கள்
சம்பிரதாயங்கள்
நம்பிக்கைகள்
நலன்கள்...
ஏதுமில்லா
இன்னமும் குளிர்கடலில்
குறுகிக்கொண்டு..

எமது நாடுகாண் பயணங்கள்

 
சிந்துபாத் போலன்றி
சிந்தும் இரத்தத்துளிகளுடன் தொடர்கின்றது
எமது நாடுகாண் பயணங்கள்
கொலம்பஸ் போலன்றி
கொடிய விஷஜந்துக்கள் மேல் தொடர்கிறது
எமது நாடுகாண் பயணங்கள்
ஊர்சுற்றும் வேட்கையிலன்றி
உயிர் காக்கும் ஆசையில் தொடர்கின்றது
எமது நாடுகாண் பயணங்கள்

ரஷ்யாவின் பனிமலைகள்
கொலம்பியச் சுரங்கங்கள்
ஜோர்தானின் நதிக்கரைகள்
நைஜீரியப் பழங்குடில்கள்
கிறிஸ்மத் தீவுகளின் கடற்கரைகள்
பப்புவாநியூகினியின் எரிமலைகளென
உலகப் பரப்பெங்கும்
எமது காலடித்தடங்களும்
கண்ணீரும் கனவுகளும் சுமந்த எம்
மூச்சுகாற்றும்...

ஒற்றை யுரேனியச் சிறுதுகளாய்
சக்தியற்று நாம்..
அபரிமிதமான வாழ்க்கையில்
மிதந்துகொண்டே....
நிலைபெறாமல் இன்னமும்...

நங்கூரமற்று நடுக்கடலில் ஒர் பயணம்...

 
ஒரு கனவாய் நடந்து முடிகிறது எல்லாமும்
சுதாகரிக்கவும் உணர்ந்துகொள்ளவும் அவகாசமின்றி...
உச்சஸ்தாயிகளும் கீழ்ஸ்தாயிகளும் கொண்ட
ஒர் இசையென
ஏற்ற இறக்கங்களுடன் இந்த வாழ்க்கை..
காட்டுவழிப் பாதையாய்
அனலும் சுனையும் இருகிறது..
புற்கள் வருடிய பாதங்களை முட்கள் வதைக்கிறது..
பருவகாலங்களென
இயல்பாயும் சிலசமயங்களில் அதிர்வுகளுடனும்..
தேர்ந்த கலைஞனின் கைவண்ணமாக இல்லாது
பிழைகள் மலிந்ததாய்...
நங்கூரங்களை கரையில் வைத்துவிட்டு
நடுக்கடலில் ஒரு பயணம்
திசை தெரிந்தால் அதிர்ஷ்டம்.
வாளின் கைகளிலா
இந்த வாழ்க்கை...

தேவைப்படுகிறதோர் பிடிப்பு..

 
எல்லோருக்கும் தேவைப்படுகிறது
வாழ்க்கைக்கானதோர்
பிடிப்பு..
நிலத்தின் பிடிப்பு
சமவெளிகளில் நிலைத்திருப்பதாய்
வேண்டப்படுகிறதோர் பிடிப்பு
வாழ்வின் நீட்டிப்பிற்கு..
இலக்கியமோ
இலட்சியமோ
பேரன்போ
பெருங்கனவொன்றோ...
தேங்காய்சில்லுகள் சிதறுமாற்போல்
மனமுடையாதிருக்க
காலநிலையென மாறிக்கொண்டேயிருக்கும்
மனநிலைகளை
மீட்டெடுத்து மீளமைக்க
எல்லோருக்கும் தேவைப்படுகிறதோர்
பிடிப்பு
நீரின் பிடிப்பு
தாழ்வுகளில் நிலைத்திருப்பதாய்...
வற்றிய குளமென
வாழ்க்கை வறளாதிருக்க
வழுக்கிவிடாதிருக்க
சொட்டுச் சொட்டாயிருக்கும்
வாழ்க்கையை ஒன்றிணைக்க
எல்லோருக்கும் தேவைப்படுகிறதோர்
பிடிப்பு..
விதை பிடித்து உருக்கொள்ளும்
பழங்களென வாழ்வமைக்க...

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

வெட்கமேயில்லாது தீண்டிய மழைத்துளி..

யாரோ வருவது போல்
திடு திடுவென்று
ஆரவாரத்துடன்
யன்னல் கண்ணாடியில்
வழிந்து நடந்து வந்தது
மழைத்துளி
என்னைத் தீண்ட.....
முடியாமல்
ஆக்ரோஷத்துடன் திரும்பவும் வந்தது
பயந்து கொண்டே
ஒளித்திருந்தேன் அறையில்
அதை பார்த்தபடி....
மீண்டும் முயற்சித்தது
பலிதாமாகவில்லை.....
திடீரென காணவில்லை மழைத்துளிகளை...
கொளுத்திய வெயிலுடன்
சூரியன் வந்தான்
புளுக்கத்திலிருந்து தப்பிக்க
தென்றல் தேடினேன் முற்றத்தில்..
எங்கிருந்தோ
சடாரென்று வந்து
என்னை
தழுவிக்கொண்டது மழைத்துளி...
வெட்கமேயில்லாமல்
என்னில் எங்கெல்லாமோ
ஊர்ந்து என்னைத் தின்றது..
நாற்குணங்களும் துறந்து
நானும் ஆரத்தழுவினேன்
கைகள் விரித்து
முகம் நிமிர்த்தி...
இதமானதாய் தானிருக்கிறது
மழைத்துளியின் தீண்டலும்
தென்றலின் தொடுகையை விட....



உனக்காகச் செய்யப்பட்ட என் இரவுகள்....

நதிக்கரையில்
தோற்றுப்போய்க் கிடக்கும்
சருகுகளென
மனம் வீழ்ந்துகிடக்கிறது
கடலைச் சென்றடைய முடியாமல்...
உனக்காகச் செய்யப்பட்ட
என் இரவுகளில்
துடித்துக்கொண்டிருக்கிறது
என் மடியில் உறங்கும்
உன் நினைவுகள்....
என்னுடைய
எல்லா அசைவுகளிலும்
நீயும் வந்துகொண்டிருக்கிறாய்
அறிவுரை கூறிக்கொண்டும்
ஆறுதல்படுத்திக்கொண்டும்
சில வேளைகளில்
திட்டிக்கொண்டும் கூட......
நீண்ட பயணங்களும்
நிரம்பி வழிந்துகொண்டிருக்கும் சிக்கல்களும்
தீர்ந்துவிடும் போலிருக்கிறது
நீ கிடைத்துவிடும் வினாடிகளில்.......